சனி, 15 செப்டம்பர், 2012

பண்பாட்டு அசைவுகள் -நூல் அறிமுகம்.

சோறு ஆக்கும்போது அதில் உப்பு போட்டு சோறாக்குவது எங்க ஊரில் பெரும்பாலான்வர்களின் பழக்கம், ஆனால் மற்ற ஊர்களில் இருக்கிற பழக்கம் சோறு ஆக்கும்போது உப்பு சேர்ப்பதில்லை, உப்பு போடாமல் செய்தால் வெப்பமண்டல பிரதேசத்தில் நீண்டநேரம் கெடாமல் இருக்கும். இதற்கு சமூககாரணியும் இருந்திருக்கிறது தமிழகத்தில். ஒடுக்கப்பட்ட சாதியினர் சோறு உலையில் கொதிக்கும்போதே உப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாக கருதப்பட்டது. மனிதன் உப்பை பயன்படுத்தக் கற்றுக்கொண்டது தான் முதல் வேதியியல் விஞ்ஞானம். சம்பளம் என்று சொல் உப்பு விளைகிற ‘அளம்’ என்பதிலிருந்து உண்டானது, slarary என்ற சொல் salt என்பதன் அடியாக பிறந்தது என்கிறார்கள்.

தமிழில் உப்புக்கு சுவை என்று பெயரும் உண்டு அதிலிருந்துதான் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு,கசப்பு என்ற சொற்கள் உண்டாகி -யிருக்கின்றன. உப்பிற்கு உணர்வும் இருக்கிறது, உப்பு போட்டுதான் திங்கிறியா? என்று சொல்வார்கள். உப்பு ஒரு மங்கலப்பொருளும் கூட புதுவீடு கட்டி குடியேறிவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் உப்புகொண்டு செல்வது கிராமத்தில் இன்றும் நிலவுகிறது. அதே மாதிரி துட்டி (துக்கம் அனுஷ்டிக்கிற) வீட்டில் உப்பு போட்டு சமைக்கமாட்டார்கள், இறந்தவரோடுள்ள உறவை அறுத்துகொள்கிற அடையாளம் அது. இதுபோன்ற தமிழர்களின் பண்பாடோடுடைய தொடர்புடையவற்றை களஆய்வோடு தமிழகம் அறிந்த பேரா. தொ.பரமசிவன் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற நூல் எழுதியுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு துஷ்டிவீட்டுக்கு சென்றிருக்கிறார், அந்த வீட்டில் திருமணமாகியுள்ள ஒருவர் சாலைவிபத்தில் பலியாகியுள்ளார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஊர்க்காரர்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியே கூடியிருக்கிறார்கள், பெண்கள் வீட்டுக்குள்ளே ஒப்பாரிவைத்திருக்கிறார்கள். அப்போது ஒரு மூதாட்டி வீட்டிலிருந்து வெளியே ஒரு சொம்பு நீருடன் வந்திருக்கிறார், பேசிக்கொண்டேயிருந்த மக்கள் மெளனமானார்கள், ஒருகையில் கொஞ்சம் முல்லைப்பூ வைத்துள்ள மூதாட்டி கூட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு பூவை சொம்பு நீரில் இட்டுள்ளார், மக்கள் த்சொ என்று அனுதாபம் காட்டியிருக்கிறார்கள், இன்னும் தொடர்ந்து இரண்டு, மூன்று பூக்களை தண்ணீரில் போட்டிருக்கிறார். பேராசியருக்கு இது என்ன சடங்கு என்று புரியவில்லை. மெளனமொழியில் உறையாடிய இந்த சடங்கின்மூலம் இறந்தவரின் மனைவி ‘மூன்று மாதம் கர்ப்பம்’ அதற்கு இறந்தவன் தான் காரணம. இன்னும் ஏழு மாதன் கழித்து பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் யார் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்கான சடங்கு அது.

தமிழ் என்ற சொல்லுக்கு நீர், இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற பொருளும் உடையது, குளிர்ச்சியுடையதால் நீரை தமிழர்கள் ‘தண்ணீர்’ என்ற பெயரிட்டார்கள். நீரினால் உடலைத்தூய்மை செய்தல் மட்டும் குளித்தல் இல்லை உடலை குளிர்ச்சி செய்தலே குளித்தல். வெப்பமண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு. இயறகையின் ஆற்றலில் நெருப்பை ஆரியர்கள் போற்றியது போல தமிழர்கள் நீரினை முதன்மைப் படுத்தியிருக்கிறார்கள். தமிழ்ர்கள் வீட்டுச்சடங்கில் ஒரு சொம்பு நீர் இடம்பெறும். (கட்டப்பஞ்சாயத்திலும் சொம்பு நீரா?). மொஹஞ்சதாரோ அகழ்வாய்வில் படிகளுடன் கூடிய நீர்த்துறை இடம்பெற்றிருக்கிறது. அது நீர்ச்சடங்கு செய்கிற குளம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சோறு என்பது நெல்லரிசி சோற்றை மட்டும் குறிக்கவில்லை,கம்பஞ்சோறு, சோளச்சோறூ, குதிரைவாலிச்சோறு என்றும் சொல்கிறார்கள், கற்றாழையின் சதைப்பற்றையும் சோறு என்று சொல்கிறார்கள். ‘சோறும் நீரும் விற்பனைக்குரிய பொருள் தமிழக்த்தில் இருந்ததில்லை. கிராமப்புறங்களில் ஊர்மடத்தில் (சாவடி)வழிச்செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் உறங்கக்கூடாது என்று ஊர்க்காரர்கள் ‘ இரவுச்சோறு’ கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. தமிழகத்தில் சமணம் நிலைபெற்ற காலத்தில் அவர்களின் தானத்தில்( கல்வி, உணவு, மருத்துவம்) உணவு தானமும் ஒன்று. விஜய நகரப் பேரரசு ஆட்சிக்குப் பின்னர் தான் சோறு விற்கப்பட்டு ஆங்கில ஆட்சியில் ஹோட்டல்கள் முளைத்திருக்கின்றன.

சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு பதிலாக ‘மனை’ என்ற சொல்லேயிருக்கிறது. உண்டு, உறங்கி, இனம் பெருக்கும் இந்த இடத்திற்குரியவளே ‘மனைவி’ எனப்பட்டாள். மன்னராட்சி காலத்தில் சாதிவாரியாக வீடுகட்டும் முறை நடைமுறையில் இருந்திருக்கிறது. சுட்டசெங்கலால் வீடுகட்டவும் மாடி எடுக்கவும் வீட்டுத்தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் பிராமணர்களுக்கு மட்டுமெ அந்த உரிமை இருந்திருக்கிறது. நிறைவாசல் சன்னல்கள், சுட்டசெங்கலால் சுவர் பின்புறவாசல் ஆகியவை தனித்தனி உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழகத்தில் அரைக்கால், முழுக்கால் சட்டை அறியப்படவில்லை. ஆங்கிலேயர்கள், நவாபு எனப்படுகிற வட நாட்டு முஸ்லீம்களால் தைத்த சட்டை அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆண்யாயினும் பெண்ணாயினும் உயர்குடிமக்களே முழங்காலுக்கீழே கணுக்கால் வரையிலான ஆடையினை அணிந்திருந்தார்கள். ஏனைய ஆண்களெல்லாம் முழங்கால்வரை தார்ப்பாய்ச்சி அணிந்திருந்தார்கள். இன்று சேலை தமிழர்களின் பண்பாட்டு ஆடை என்று சொல்கிறார்கள். சேலை 15ம் நூற்றாண்டில் தமிழக்த்தில் நடைபெற்ற விஜயநகரப் பேர்ரசு, தெலுங்கு மக்களின் குடியேற்றமும் தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம். இக்காலத்திற்கு முன்னர் ‘புடவை’ என்ற சொல் ஆண்களும் பெண்களும் மேலே அணியும் நீண்ட துணியினையே குறித்தது. சாதிய அமைப்பில் ஓர் இளைஞன் தன் திருமண நாளன்றுதான் பெரியவர்கள்முன்பு தோளில் துண்டு அணிய அனுமதிக்கப்படுகிறான்.பெரியவர்களிடம் பேசும்போது இளைஞர்களின் துண்டோ வேட்டியோ காற்றில் அலையுமாறு நின்ரு பேசுவது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது, அதனல் ஒடுக்கப்பட்டவர்கள் மேல்சாதிக்காரகள் முன்னிம் துண்டை இடிப்பில் கட்டும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

கி.பி. 17ம்நூற்றாண்டுவரை தமிழ்மக்களின் இயற்பெயர்கள் பெரும்பாலும் நான்கு அல்லத் ஐந்து எழுத்துப்பெயர்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஷ, ஸ, ஹ, ஜ, ஆகிய எழுத்துக்கள் உள்ளடக்கிய பெயர்களெல்லாம் உயர்வு தருபவையென்று சமீபத்தில் பத்திரிக்கை, வானொலி, டி.வி மூலம் உருவாகியிக்கிற மா்ற்றம். சாதிவாரியாக பெயர் வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ‘பெயர் சொன்னால் எளிதில் சாதி விளங்கும்’ என்ற நிலை இருந்திருக்கிறது. அமாவாசை, பலவேசம், சுடலை, கழுவன், ஒச்சன், ஆடி, கருப்பன், மாடசாமி, பிச்சை, பேச்சி முதலியவை ஒடுக்கப்பட்டவர்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள். மனுஸ்ருமிதியிலும் பெயர்கள் வர்ணக்கொட்பாடின் அடிப்படியில் வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலோர், கீழோர் என்ற பிரிவு விஜயநகரப் பேரரசு என்ற இந்து சாம்ராஜ்யத்தால் விளைந்தவை. தாலி அணியும் வழக்கம் கி.பி.10ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இருந்ததில்லை. ‘தாலியறுத்தான் சந்தை’ என்ற ஊர் குமரிமாவட்டத்தில் உள்ளது. தோள்சீலைப் போராட்ட காலத்தில் நாயர்கள் போராடிய சாதி பெண்களின் தாலிகளை அறுத்தனர். அதன் காரணப்பெயரில் ஊர் விளங்குகிறது.

தீபாவளிப் பண்டிகையும் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசு கொண்டுவந்த திருவிழா,சமண மதத்தின் 24ம் தீர்த்தங்கரரான் வர்த்தமானரின் இறந்த நாள் தான் தீபாவளி. தான் இறந்த நாளை வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரார் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார். பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நரகாசுரன் அழிந்ததாக தீபாவளிக்கதைகள் குறிப்பிடுவது மகாவீரர இறந்த நாளை ஆகும்.பிள்ளையார் கி.பி. 6ம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தக்கடவுள் வழிபாடு மாராட்டியத்தில் தென்பகுதியில் சித்பவனப் பிராமணர்கள் இடையே தோன்றியது. பின்னர் கீழைச்ச்ளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலைகொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் பரவியது. விநாயகர் என்பபடும் பிள்ளையார் வழிபாடு, வியாபாரம் செய்த சாதியார் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


பறையர்கள் எனப்படுவோர் தமிழகத்தின் தொல்குடிகளுள் ஒரு பிரிவினர் ஆவர். பறை எனும் தோற்கருவியின் அடையாளமாக இச்சொல் பிறந்திருக்கிறது. தோலைப் படுத்தத் தேவைப்படும் மூலப்பொருள்கள் சுண்ணாம்பு, அதை சேகரித்து காளவாசிலி இட்டுச் சுடுகின்ர பறையர் ‘சுண்ணாம்புப்ப்றையர்’ எனப்பட்டனர். வர்ணகோட்பாட்டில் மான் தோல் தவிற்த்து எல்லா தோல்களும் தீட்டுகுரியவை, எனவே இந்த வேலையை செய்பவர்கள் ‘இழிந்த’ சாதி ஆக்கப்பட்டனர். பறையர்கள் சில சாதியினருக்கு சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளார்கள். ‘பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீச்சாதியானான்’ என்னும் சொல்லடை தென்மாவட்டங்களில் வழங்கி வருகிறது. சிவபெருமான் சாபம் கொடுத்த கதை ஒன்று. திருவாரூர்க் கோவிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த் அவேள்வியின் பயனாக சிவபெருமான் ஒரு பறைமகன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில்போட்டுக்கொண்டு வேள்விக்கூடத்திற்கு வந்துவிட்டார். “பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டுவிட்டது’ என்று கத்திக்க்கொண்டே யாகம் செய்த பார்ப்பனர்கள் வெளியே ஓடிவிட்டனர். சீனங்கொண்ட சிவபெருமான்’ நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்தாரம். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு கெஞ்சியிருக்கிறார்கள். மனம் இரங்கிய சிவன் நிரந்தரமாக பறையன் ஆக்குவதற்குப் பதில் மத்தியானம் ஒரு நாளிகை நேரம் பறையர்களாகிவிடுவார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்; என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னும் ஏராளமான பண்பாட்டு தகவல்கள் நிறைந்துள்ள நூல் ‘ பாண்பாட்டு அசைவுகள்’, பெளத்தம், சமணம் தமிழகத்தில் செய்த மாற்றங்கள் என்ன என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

எழுத்துப் பிழைகளை நீக்கலாம்